50 கிலோ கிராம் உரமூடைக்கு 2,500 ருபா உச்ச விலை

50 கிலோ கிராம் உரமூடைக்கு 2,500 ருபா உச்ச விலை

0
SHARE

விவசாயிகளுக்கு வழங்கப்படும் சகலவகையான உரவகைகளினதும் ஐம்பது கிலோ கிராம் மூடை ஒன்றுக்கு 2,500 ருபா உச்ச விலையை நிர்ணயிப்பதற்கு  ஜனாதிபதி குறித்த தர்ப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் இன்று(29) நள்ளிரவு முதல் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயங்களின் இறக்குமதித் தீர்வையை அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடெங்கிலுமுள்ள விவசாய சமூகத்தினர் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு குறித்த சகல தரப்பினரதும் பங்குபற்றுகையுடன் இன்று (29) முற்பாகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது  ஜனாதிபதி  இந்த ஆலோசனைகளை வழங்கினார்.

இதுவரையில் 50 கிலோ கிராம் உரமூடையொன்று ரூபா 2750, 3400 மற்றும் 3500 என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்ததோடு, உரக்கொள்வனவின் போது விவசாய சமூகத்தினர் முகங்கொடுத்து வந்த பல்வேறு அசௌகரியங்களைக் கவனத்திற் கொண்டு  ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

மேலும் உரமூடையின் மேற்பகுதியில் உரத்திற்கான    விலை காட்சிப்படுத்தப்படுவதை கட்டாயமாக்கும் படியும் ஆலோசனை வழங்கிய  ஜனாதிபதி, அரசாங்க மற்றும் தனியார்த் துறை இரண்டிலும் உரத்தினை கொவிஜனசேவா மத்திய நிலையத்தினூடாக விநியோகிப்பதற்கும் ஆலோசனை வழங்கினார்.

ஹெக்டயார் ஒன்றுக்கு விவசாய  சமூகத்திற்கு வழங்கப்படும் 25,000 ருபா உர மானியம் விவசாயிகளின் எந்தவொரு வங்கிக்கணக்கிற்கும் வரவு வைக்கப்படுவதற்கும்  விவசாயிகள் பெற்றுக்கொண்டுள்ள கடன்தொகைக்கு அந்த உதவித்தொகையிலிருந்து அறவிடாதிருப்பதற்கும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த  ஜனாதிபதி, விவசாய சமூகத்தினர் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் வகையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பட மாட்டாது என்றும் அதே போன்று விவசாய சமூகத்தினர் மீது பொருளாதார சுமைகளைச் சுமத்தாதிருப்பதும் அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

நெல் கொள்வனவு மற்றும் உரமானியம் தொடர்பில் விவசாய சமூகத்தினர் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடி அப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க நடவடிக்கைகளை எடுப்பதாகவும்  ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இப்பிரச்சினை தொடர்பில் ஒரு விசேட கலந்துரையாடல் பொலன்னறுவை மாவட்ட விவசாய சங்க உறுப்பினர்களின் பங்குபற்றுகையுடன் நேற்று(28) பிற்பகல் பொலன்னறுவையில் நடைபெற்றதோடு, அதன்போது அவ்வுறுப்பினர்கள் முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் தேசிய உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்தும் போது அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதோடு  ‘நச்சுப்பொருட்கள் அற்ற நாடு’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மார்ச்சு மாதம் 06, 7, 8, ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய கண்காட்சி குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சங்கைக்குரிய அத்துரலியே ரத்ன தேரர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்களான ரவி கருணாநாயக்க,   துமிந்த திசாநாயக்க  மற்றும் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

BPK/PMU

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY