தூங்கும் போது கண்கள் சுற்றுவது உங்களுக்குத் தெரியுமா?

தூங்கும் போது கண்கள் சுற்றுவது உங்களுக்குத் தெரியுமா?

0
SHARE

உலகம் முழுவதும் வாழும் சுமார் 700 கோடி மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுந்திருப்பது கிடையாது. தூங்கும் நேரமும், தூங்கும் விதமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலர் சீக்கிரமாகத் தூங்கி, சீக்கிரமாக எழுந்திருப்பார்கள். சிலர் லேட்டாகத் தூங்கி சீக்கிரமாக எழுந்திருப்பார்கள். இது அவரவர்களின் சவுகரியத்தைப் பொறுத்தே அமையும்.
இதேபோல் தூங்குகின்ற விதமும் அவரவர்களின் சவுகரியத்தைப் பொறுத்தே அமைகின்றது. நின்று கொண்டே தூங்குவது, உட்கார்ந்து கொண்டே தூங்குவது, பஸ்ஸில் போகும்போதே தூங்குவது, ஸ்கூட்டரில் பின்னாடி உட்கார்ந்து தூங்குவது, காரில் முன்னாடி உட்கார்ந்து தூங்குவது, எழுதிக்கொண்டே தூங்குவது, படித்துக் கொண்டே தூங்குவது, இப்படி பலவகையாக நாம் தூங்குகிறோம்.

image
எப்படி வேண்டுமானாலும் தூங்கலாம். தப்பில்லை, ஆனால் கார் ஓட்டிக்கொண்டே தூங்குவது மட்டும் தான் யாரும் செய்யக்கூடாத ஒரு மிகப்பெரிய தப்பான காரியமாகும். நாம் தூங்கும் விதத்தில் இத்தனை வகைகள் இருந்தாலும், மருத்துவ ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் தூக்கத்தை இரண்டு வகையாக பிரித்து கூறுகிறார்கள்.
ஒன்று, கண்கள் சுற்றிக்கொண்டே தூங்குவது அதாவது ஆர்.இ.எம். தூக்கம் (RAPID EYE MOVEMENT SLEEP) மற்றொன்று கண்கள் சுற்றாமல் தூங்குவது. அதாவது NREM தூக்கம் (NON RAPID EYE MOVEMENT SLEEP ).
ஒரு நபர் தூங்கும்போது அவருடைய கண் இமைகள் இரண்டையும் திறந்து பார்த்தால் உள்ளே கண் உருண்டை ஒரு பம்பரம் சுற்றுவதைப்போல் வேகமாக சுற்றிக்கொண்டு இருக்கும். ஆனால் அந்த நபர் நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பார். இது ஒரு வகை. இதைத்தான் ஆர்.இ.எம். தூக்கம் என்று சொல்வதுண்டு. இன்னொரு வகை என்.ஆர்.இ.எம் தூக்கம் ஆகும்.
இந்த வகையில் கண் இமைகளைத் திறந்து பார்த்தால் உள்ளே கண் உருண்டை ஆடாமல் அசையாமல் ஒரே நிலையில் இருக்கும். அந்த நபரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பார். இதைத்தான் என்.ஆர்.இ.எம் தூக்கம் என்று சொல்வதுண்டு. பொதுவாக கண்களை மூடி தூங்குவது மட்டும் தான் நமக்குத் தெரியும்.
ஆனால் கண் இமைகளுக்குள்ளே என்ன நடக்கிறதென்று நமக்குத் தெரியாது. மேலே சொன்னமாதிரி கண்ணுக்குள்ளே கண் உருண்டை பம்பரம் போல் சுற்றுவதும் தெரியாது. சுற்றாமல் இருப்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் விஞ்ஞானப் பூர்வமாகவும், மருத்துவ ரீதியாகவும் கண்ணுக்குள்ளே நடப்பது இதுதான்.
உடனே நீங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தூங்கும்போதும் இமைகளைத் திறந்து பம்பரம்போல் கண் உருண்டை சுற்றுகிறதா? இல்லையா? என்று பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். அவர்களது தூக்கம் கெட்டு விடும். கண்கள் சுற்றிக்கொண்டு தூங்குவது, கண் சுற்றாமல் தூங்குவது, இந்த இரண்டு வகைத் தூக்கத்தில் ஒவ்வொரு வகை தூக்கத்திலும் ஒவ்வொரு விதமான உடல் ரீதியான, மனரீதியான, நரம்பு ரீதியான தோற்றங்களும், மாற்றங்களும் தென்படும்.
நாம் தூங்கும்போது கண்கள் சுற்றிக்கொண்டு தூங்குவதும், கண்கள் சுற்றாமல் தூங்கும் ஆர்.இ.எம் தூக்கமும் மாறி மாறி வரும். எப்பொழுது கண்கள் சுற்றிக்கொண்டு தூங்குவோம், எப்பொழுது கண்கள் சுற்றாமல் தூங்குவோம் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஒரு இரவில் நாம் தூங்கும் நேரத்தில் சுமார் 5 முறை ஆர்.இ.எம் தூக்கம் வந்துவந்து போகும்.
ஒரு மனிதன் படுத்தவுடன் முதலில் கண்கள் சுற்றாத என்.ஆர்.இ.எம் தூக்கத்தில் ஆரம்பித்து பின் கண்கள் சுற்றும் தூக்கத்திற்கு வந்து அதற்குப் பிறகு கண்கள் சுற்றாத தூக்கத்திற்கு வந்து இப்படி மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். ஒரு ஆர்.இ.எம் தூக்கமும், ஒரு என்.ஆர்.இ.எம் தூக்கமும் சுமார் 90 நிமிடங்களுக்கு நீடிக்கும்.
சிலருக்கு ஆர்.இ.எம் தூக்கம் மட்டுமே இருப்பதுண்டு, சிலருக்கு என்.ஆர்.இ.எம். தூக்கம் மட்டுமே இருப்பதுண்டு. கண்கள் சுற்றும் தூக்கத்தில் கண் இமைகளில் லேசான அசைவு இருக்கும். அந்த நேரத்தில் கண் இமைகளைத் திறந்து பார்த்தால் உள்ளே உள்ள கண்ணின் கருவிழி இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் மேலேயும் கீழேயும் சுற்றிக் கொண்டே இருக்கும்.
தூக்கம் நன்றாக இருக்கும். விழிப்பு வராது. கண்கள் சுற்றும் தூக்கத்தில் தான் கறுப்பு வெள்ளையிலும் கலரிலும் கனவுகள் நிறைய வரும். ஒவ்வொரு இரவிலும் மூன்றிலிருந்து 5 முறையாவது இந்த கண்கள் சுற்றும் தூக்கம் வரும். ஒரு மணி நேரத்திற்கு அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்தக்கண்கள் சுற்றும் தூக்கம் வரும்.
ஒரு முறை வந்தால் சுமார் 5 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் வரை இந்தத் தூக்கம் நீடிக்கும். நாம் தூங்கும் மொத்த தூக்கத்தில் சுமார் 20 சதவீத தூக்கம் கண்கள் சுற்றும் தூக்கமே. அதாவது சுமார் ஏழிலிருந்து எட்டு மணி நேரம் வரை நாம் தூங்கினால் அதில் சுமார் இரண்டு மணி நேரம் இந்த கண்கள் சுற்றும் தூக்கம் தான்.
இந்தத் தூக்கத்தில் இதயத்துடிப்பு ஒரே சீராக இருக்காது. சுவாசிப்பதும் ஒரே சீராக இருக்காது. கண்கள் வேகமாக சுற்றும். மூச்சு மெதுவாகவும் மேலோட்டமானதாகவும் இருக்கும். ஆழ்ந்த மூச்சு இருக்காது. இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் கூடி விடும். கைகால் தசைகள் வலுவிழந்து மரக்கட்டைபோல் ஆகிவிடும். உடல் தூங்குவது இந்தக்கண்கள் சுற்றும் தூக்கத்தில் தான்.
இரண்டாவது வகையான கண்கள் சுற்றாத தூக்கத்தில் கண் இமைகளைத் திறந்து பார்த்தால் கருவிழி எங்கேயும் சுற்றாமல் அப்படியே இருக்கும். கனவுகள் அதிகமாக இந்தத் தூக்கத்தில் வராது. கண்கள் சுற்றாத தூக்கத்தில் முதல் நிலையில் அரை குறையாக மயக்கநிலை தூக்கமே இருக்கும். திடீர் திடீரென்று கை கால்களில் அங்கும் இங்கும் துடிப்புகள் இருக்கும்.
இந்தத் தூக்கத்தின் இரண்டாவது நிலையில் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாது. ஆழ்ந்த தூக்கம் இந்த நிலையில்தான் இருக்கும். மொத்த தூக்கத்தில் சுமார் 45 லிருந்து 50 சதவீத தூக்கம் இந்த இரண்டாவது நிலை தூக்கத்தில்தான் ஏற்படுகிறது. என்.ஆர்.இ.எம் மூன்றாவது நிலையில் தான் திகில், மர்மம், மிரட்டல், தூக்கத்திலேயே சிறுநீர்போவது, தூக்கத்திலேயே எழுந்து நடப்பது, உளறுவது ஆகியவை நடக்கும்.
மூளை தூங்குவது இந்தக் கண்கள் சுற்றாத தூக்கத்தில் தான். கண்கள் சுற்றாத தூக்கத்தின் நான்காவது நிலையில் கனவில்லாத ஆழ்ந்த தூக்கம் இருக்கும். இதயத் துடிப்பு, சுவாசம் ஆகியவை சீராகவும், மெதுவாகவும் இருக்கும். ரத்த அழுத்தமும் சற்று குறைந்துவிடும். கண்கள் சுற்றும் தூக்கத்திலிருப்பவன் ஒரு சோம்பேறி மாதிரி நடந்து கொள்வான்.
கண்கள் சுற்றாத தூக்கத்தில் இருப்பவன் ஒரு லூஸ் மாதிரி நடந்து கொள்வான். இது தூங்கும்போது மட்டும்தான். இவைகளை படித்து முடித்த பின் உங்கள் தலை சுற்றுகிறதா? பயப்பட வேண்டாம். இரவு வருகிறது தூக்கமும் வருகிறது. கண்களை மூடுகிறோம், தூங்கியும் விடுகிறோம். தூங்கும்போது என்னனென்ன நடக்கிறது என்பதை நீங்களும் தெரிந்து வைத்துக் கொள்வதற்காகத்தான் இத்தனை விளக்கம்.

comments

comments

 photo Untitled-1 1_zpspflenn6n.jpg  photo 1a9596e9-03b1-4f28-bc7a-f89076c665b2_zpsgro7huv4.jpg

NO COMMENTS

LEAVE A REPLY